7/03/2008

தமிழன் என்று தமிழனாவான்?

தமிழர்களிடம் தமிழைப்பேசுங்கள்

தமிழ் வருட பிறப்பு வாழ்த்தை தங்களது தாய் மொழியில் கூறாமல் ஆங்கிலத்தில் கூறி ஒருவருக்கொருவர் வாழ்த்திக்கொள்ளும் ஒரே இனம் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
அதென்னமோ தெரியவில்லை, ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு விலகி 60 வருடங்கள் ஆகிவிட்டாலும் ஆங்கில மோகம் மட்டும் நம்மை விட்டு விலகவில்லை. தமிழ் திரைப்படங்களாகட்டும், தொலைக்காட்சியாகட்டும் , தமிழ் பத்திரிகைகள் ஆகட்டும், ஆங்கில ஆதிக்கம் நம்மை எந்த அளவுக்கு பாடாய் படுத்தி எடுக்கிறது என்பதை கண்கூடாக பார்க்கலாம்.

இரண்டு மலையாளிகளோ இரண்டு தெலுங்கு பேசுபவர்களோ சந்தித்து கொண்டால் அவர்கள் பேசுவது தத்தம் தாய் மொழியிலாக தான் இருக்கும். ஆனால் இரண்டு "படித்த" தமிழர்கள் சந்தித்துக்கொண்டால் "ஹலோ, ஐ ஆம் ..." என்று ஆங்கிலத்திலேயே பிளந்து கட்டுவார்கள். தமிழில் பேசிக்கொண்டால் கெளரவ குறைச்சலாம். மூன்றாவது நபராக தமிழ் தெரியாதவர் ஒருவர் அருகில் இருந்தால் இதை ஏற்றுக்கொள்ளலாம். அதற்கு இங்கிதம் என்று பெயர். ஆனால் இருப்பதோ இரண்டே பேர், இருவருக்குமே தமிழ் தெரியும் என்கிற போது ஏன் ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்கிறார்கள் என்று தான் தெரியவில்லை.

'ஒரு வேளை தமிழில் பேசினால் தன்னை படிக்காத முட்டாள் என்று மற்றவர்கள் நினைக்க கூடும்' என்று ஒரு தாழ்வு மனப்பான்மையா? அல்லது ஆங்கிலத்தில் பேசினால் தான் நான்கு தம்மை மதிப்பார்கள் என்கிற நினைப்பா?

இதற்காக ஆங்கில எதிர்ப்பு இருக்க வேண்டும் என்று கூறவில்லை. 'ஐஸ்க்ரீம், பஸ்' போன்ற மக்களிடம் சாதாரணமாக வழக்கில் இருக்கும் வார்த்தைகளை தமிழாக்கம் செய்ய வேண்டும் என்று அபத்தமாக வாதம் செய்ய வரவில்லை. ஆனால், தமிழில் எளிய சொற்கள் இருக்கும்போது, என்னவோ 'பிறந்தது லண்டன், வளர்ந்தது ஆஸ்திரேலியா' போல, சிலர் வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலத்தையே உபயோகித்தால் எரிச்சல் தான் வருகிறது. இன்று வானொலியில் கேட்கின்ற பல பாடல்களுக்கு அர்த்தமே புரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் 'இது த‌மிழ் பாட‌ல்தான்' என்று ஒருவ‌ர் வ‌ந்து விளக்க வேண்டும் போல் உள்ளது.
"நாயில் நதியாக" என்று சாதனா சர்கம் பாடினால் "ஆஹா ஓஹோ" என்று கேட்கிறோம். கடைசியில் அது என்ன 'நாயில் நதி', 'நதியில் நாய்' என்று அல்லவா இருக்க வேண்டும் என்று நண்பரிடம் கேட்டால் "நைல் நதியாக" என்பதை அவ்வளவு அழகாக பாடியிருக்கிறார் என்று கூறினார்! இதே போல தான் உதித் நாராயண் என்ற பாடகர் எத்தனை முறை தமிழை கொலை செய்தாலும் தாங்கி கொள்ள வேண்டியிருக்கிறது. கேட்டால், "மக்கள் விரும்புகிறார்கள்" என்று இசை அமைப்பாளர்கள் கூறுகிறார்கள். யாரோ போய் மக்களிடம் ஓட்டெடுப்பு எடுத்த மாதிரி! தமிழனுக்கு உண்மையிலேயே பெரிய மனது தான், இது போன்ற பாடல்களை கேட்டு சகித்து கொள்வதற்கு!
இவர்களையாவது, தாய் மொழி தமிழ் இல்லை என்பதால் 'போனால் போகிறது' என்று மன்னித்து விடலாம். ஆனால் தமிழையே தாய் மொழியாக கொண்டு தமிழ் நாட்டில் வாழ்பவர்களை பற்றி பார்ப்போம். "தமிழ்" என்கிற வார்த்தையை சரியாக எத்தனை பேரால் இன்று கூற முடிகிறது? "தமில்", "ஏல் ரூவா" என்றெல்லாம் கேட்டால் நாராசமாக இல்லை?

தமிழ் வலைத்தளங்களையே எடுத்துக்கொள்ளோம். பாதிக்கு மேல் தரம் தாழ்ந்து இருக்கின்றன. 'ஜனரஞ்சகம்' என்ற பெயரில் தமிழை கொலை செய்து கொச்சை படுத்தி இடுவது சரிதானா என்று வலைப்பதிவர்கள் யோசனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த அழகில் தமிழ் செம்மொழி என்று வேறு நம்மை நாமே முதுகில் தட்டிக்கொள்கிறோம்!

"தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு" என்ற அருமையான பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயர் "டூயட்"! "ஜூனியர் விகடன்", "குமுதம் பக்தி ஸ்பெஷல்" - இவை பத்திரிகைகளின் பெயர்கள். ஆங்கில அடிமைத்தனம் எவ்வளவு தூரம் நமது சமுதாயத்துக்குள் நுழைந்து விட்டது பார்த்தீர்களா?
ஒரு வெள்ளைக்காரரிடம் ஆங்கிலத்தில் பேசும் போது தமிழ் கலந்து பேசினால் எவ்வளவு கேவலமாக இருக்கும்? அது போல தானே ஒரு தமிழர் மற்றொறு தமிழரிடம் தேவை இல்லாமல் ஆங்கிலத்தில் பேசும்போது தன்னை தானே கேவலப்படுத்தி கொள்கிறார்?
போகிற போக்கை பார்த்தால் நல்ல தமிழை கேட்க இலங்கைக்கோ மலேசியாவுக்கோ செல்ல வேண்டும் என்றே தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், நண்பர்களே

No comments:

About Me