2/01/2011

காதல் கிரீடம்.

காதல் ஜோதியே என்மேல் கோபமா-நான்
திரியாய் எரிவது உந்தன் சாபமா?
கண்களில் என்னடி காதலின் தாபமா
காணலாய் கனவுகள் கழிவதே லாபமா?

கண்களால் சொன்னதும் காற்றிலே போகுமா
காதலின் வேள்வியில் என் கட்டையும் வேகுமா
கனவுகள் கலைகையில் கண்ணீரும் ஏகுமா
என் கல்லறை கண்டு உன் கல்நெஞ்சு நோகுமா?

மாலையும் மடியும் மறத்தல் நியாயமா
மல்லிகை மணக்கும் மஞ்சமும் மாயமா
காலத்தால் உள்ளாற தீச்சுட்ட காயமா
கனவுகளைக் கட்டிப்போட மனதென்ன லாயமா

ரெட்டைஜடைப் பின்னலும் ஒற்றையடிப் பாதையும்
கடற்கரைக் காற்றும் கையருகில் நீயும்
அழகழகாய்ப் பூக்களும் அதனை மிஞ்சும் நீயும்
அத்தனையும் மறக்க அன்பே ஆகாது!

சாபமும் கோபமும் சடுதியில் மாறட்டும்
சந்தோஷ தருணங்கள் மறுபடி மலரட்டும்
ஊடலும் கூடலும் காதலின் வேஷங்கள்
உலகம் உணரட்டும் காதலர் பாஷைகள்!
-கவிகன்னல் சபீர்.

27 comments:

அதிரைBBC said...

காதல் கிரீடம் - என்னவோ காதலித்தவர்களுக்குத்தான் போலும், அப்படின்னா இன்றும் காதலிப்பவர்களுக்கு !?

இதனையே காதல் தவிர்த்து "அன்பு" ன்னு இல்லாளிடம் சொன்னால் அப்படியே உருகிடுவாள் அவளிடமே அதே காதல் வார்த்தையை போட்டுச் சொன்னால் "உருட்டி எடுத்திடுவாள்" இன்னும விட்டுத் தொலையவில்லை அவளின் நினைப்பை என்று !!!

sabeer.abushahruk said...

crown,
துவக்கமும் கருவும் நீஙகளே தந்துவிட்டதால் தொடர்வது மிக சுலபமாகவே இருந்தது.

தென்றலின் சாயல்,
காதல் என்று துவங்கியவர் கிரவுன். அவர் அன்பென்று துவங்கியிருந்தால் நானும் அப்படியே தொடர்ந்திருப்பேன்.

மொழியின் விழி எனக்கு டூ மச்.

crown said...

கண்களில் என்னடி காதலின் தாபமா
காணலாய் கனவுகள் கழிவதே லாபமா?
-----------------------------------
கானல் நீர்போல் காதல் நிச்சயம் ஆகாமல் கணவாய் போய்விடுமோ என்கிற ஏக்கம்.
கானல் நீர் பொய்! ஆனால் காதல் பிரிந்தால் கண்ணொடு இதயம் சேர்ந்து அழும் அந்த கண் நீர் பொய்யாகுமா?
------------------------------------சாபமும் கோபமும் சடுதியில் மாறட்டும்
சந்தோஷ தருணங்கள் மறுபடி மலரட்டும்
ஊடலும் கூடலும் காதலின் வேஷங்கள்
உலகம் உணரட்டும் காதலர் பாஷைகள்!
----------------------------
நடந்தது, நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பதை பார்போம். நாம் கடந்து வந்த சந்தோச தருணங்களை நினைத்துப்பார். ஊடல் என்பது நிரந்தரமல்ல அது போல் தான் காதலில் இவையெல்லாம் சகஜம். சாமாதனமே நிம்மதி என்று காதல் சங்கதியை உணர்திய கவித ,கவித

sabeer.abushahruk said...

கிரவுன்,
ஏதாவது தலைப்புகொண்டு ஹைகூ ட்ரை பண்ணுவோமா?

நீங்கள் துவங்குங்கள், போட்டியில் நானும் கலந்து கொள்கிறேன்.

அதிரைBBC said...

உறவுக்குள் வந்தவள்..
உரிமையை தட்டிப் பறித்தாள்..

sabeer.abushahruk said...

உரிமையை தட்டிப் பறித்து
பெற்றுத் தந்தாள்
உறவுகளை...
குட்டி குட்டியாய்!

அதிரைBBC said...

குட்டி குட்டியாய்
உரிமங்களின் அடையாளம்..

குத்திக் குத்திக்
காட்டுகிறாள் அப்படியே
அப்பன் புதியென்று !

crown said...

"குட்டி"களால் "உயர்ந்தது" நம் நிலை பெற்றோர்கள்லென்று.
(அல்லது) இந்த குட்டிகள் செய்த பெரிய காரியம் நம்மை பெற்றோர் ஆக்கியது.(சங்கிலித்தொடரா தொடர்ந்து பார்த்தேன். சந்ததி என்பது சங்கிலித்தொடர்தானே?)

crown said...

குட்டி குட்டியாய்
உரிமங்களின் அடையாளம்..

குத்திக் குத்திக்
காட்டுகிறாள் அப்படியே
அப்பன் புதியென்று !
------------------------------------அப்பனாக்கியதில் பாதி அவள் பங்குதானே?

crown said...

பாசத்தை சமமாய் பிரித்துக்கொண்டோம் .குடும்பம் வாழ்வதற்கு.

crown said...

நான் வாழ அவள் உயிர்தேவை , அவள் இறக்கும் வரை.

crown said...

மரணம் ஆன்மாவின் அடுத்த பயணம்.

crown said...

இருவகைப்பயணம் ஓன்று பிறப்பிலிருந்து, இறபிற்கு.இரண்டாவது இறப்பிலிருந்து மருபிறபிற்கு.(மாஃபிரத்திற்கு)

sabeer.abushahruk said...

அப்பன் புத்தியென
குத்திக்குத்திக் காட்டினாள்
அம்மாவை அனைத்த தன்
பிள்ளையைப் பார்த்து!

(where is crown?)

crown said...

பெரிய வில்லங்கமா இருக்கே ! யார்ர அம்மாவன்னு கொஞ்சம் தெளிவா சொல்லிடுங்க.

crown said...

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் -வெட்டிக்கிளி.

crown said...

வாயிலில் நஞ்சு அதன் வழி உணவு ஆனாலும் சாவதில்லை- பாம்பு.

crown said...

பறித்து புறமுதுகில் தூக்கி போட்டு பின் மேசைக்கு
மரியாதையாக கொண்டுவந்து ஆஹா!ஓஹோ வென பாராட்டி ருசிக்கப்படுகிறதே- தேயிலை.

crown said...

குதிரை,யானை,கழுதை இன்னும் சில பிராணிகளின் தொடரோட்டம் .இருந்தாலும் ஒரே அச்சில் தடம் மாறாமல் ஓடி முடிக்கிறது!!! -குடை ராட்டினம்.

crown said...

மேலே இருப்பவர்களை கீழேயும், கீழே இருப்பவர்களை மேலேயும் பின் மாறி,மாறி சுழற்றும். வாழ்கை தத்துவத்தின் அடையாளமாய் "அன்ன ஊஞ்சல்".

crown said...

தலைவர் வந்தார் மறியாதை செலுத்தும் விதமாய்
சல்யூட் அடித்தனர்.கொடி ஏற்றினார் அவரை விட்டுவிட்டு
கொடிக்கு சல்யூட் அடித்தது கூட்டம்.

அதிரைBBC said...

அப்பன் புத்தியென
குத்திக்குத்திக் காட்டினாள்
அம்மாவை அனைத்த தன்
பிள்ளையைப் பார்த்து! ///

இதுகூட அப்பனுக்கு
தெரியலையே முனுமுத்தால்..

sabeer.abushahruk said...

//உண்ட வீட்டுக்கு ரெண்டகம் -வெட்டிக்கிளி.//

ரெண்டு அகத்தில்
உண்டால்
வெட்டும்
வீட்டுக்கிளி!

sabeer.abushahruk said...

மெல்ல விடியட்டும்!

சுடும் சுடரே
சும்மாயிரு
நிலவின் நித்திரை
நெருடாதே!

அடிவான இருளே
அகலாதிரு
அன்பானவள் உறங்கட்டும்
விடியாதே!

கோழியின் கணவனே
கூவாதிரு
கோதையின் தூக்கம்
குழப்பாதே!

மை நிற இரவே
விடியாதிரு
கை பிடித்தவள் அமைதி
கலைக்காதே!

கட்டிலின் மெத்தையே
கனைக்காதிரு
புரண்டு படுக்கையில்
புலம்பாதே!

மற்றொரு பொழுதே
புலராதிரு
மனைவியின் பூவிழி
மலரும்வரை!

எல்லாம் சேர்ந்து
எனக்கு உதவுங்கள்
உழைத்து களைத்த 
என்
மனைவி உறங்குகிறாள்!

(நன்றி:அதிரை நிருபர் பின்னூட்டமொன்றில் தொட்டுவைத்த அபு இபுறாஹீமுக்கு.)

அதிரைBBC said...

இப்படி தூங்கவைத்தேன்
பகல் பொழுதையே
இரவாக்கிய பாக்கியவதியை !

Shameed said...

மாதாம் முழுவதும் இரவு
ஆனால் அந்த முழு நிலவும்
என் அருகில்
மாதாம் முழுவதும்

அதிரைBBC said...

இரவில் கண்டெடுத்த
அந்த நிலவை !

பகல் பொழுதில்
தேய்த்து விடாதீர்கள் !

About Me