1/30/2011

பயணி கவனிக்கிறாள்.

இசைத்
துளி யொன்று
"டிங் டாங்" கென
விழுந் துடைய
எங்கள் கவனத்திற்கு
விமான தாமதத்தை
அறிவித்தப்
பெண்குரல் -
மற்றுமொரு
"டிங் டாங்" அடைப்புக்குள்
மெளனிக்க...
காஃபிக் கோப்பையினடியில்
கரையா திருந்த
சர்க்கரைப் படிகம்
கடைசி உறிஞ்சலில்
கூர்மையாக இனித்து
காசு கொடுத்து வாங்கிய
கசப்பை
களைத்துப் போட்டது!
இன்னபிற விமானங்கள்
வருவதும் போவதும்
அறிவிக்கப்ப்பட்டுக்கொண்டேயிருக்க
பிஸ்கோத்தும்
தண்ணீர் போத்தலும்
தவிர
தயிர்சாதம்கூட
பிரித்துண்டனர்
எம்
சக பயணிகள்.
முன் தினம் வாங்கி
வாசிக்காமல் வைத்திருந்த
பத்திரிக்கையை
பிரிக்கும் கணங்களில்
என்மேல்
தங்கிநின்ற பார்வையொன்று தட்டுப்பட...
தாமதம்
சுவாரஸ்யப்பட்டுப்போனது.
அத்தனை குருக்கீடுகளிலும்
வெட்டுப்படாமல்
பராமரித்தவளின்
பார்வையை
கவிதைகளாய்
மொழிபெயர்த்து
பின்
குறியீடுகள் கொண்டு
அழகு படுத்துவதற்குள்
மூன்று மணி நேர
தாமதத்திற்கு வருந்தி
புறப்படச்சொல்லி
மெளனமானாள் அறிவிப்பாளினி.
இம்முறைக்கான
இசைத் துளி
விழுந்து உடையாமல்
மிதந்துகொண்டே இருந்தது!

-கவிகன்னல் சபீர்.

8 comments:

அதிரைBBC said...

என் வாழ்வின் பயணத்திலிருப்பவளும் கவனிக்கிறாள் !

sabeer.abushahruk said...

தென்றலின் சாயல்,

ச்சும்மா பயங்காட்ட வேணாம். வாழ்வின் பயணத்தில் இணைவதற்கு முன் நடந்த பழய நெனப்புன்னு சொல்லி சமாளிச்சாச்சு.

அதிரைBBC said...

உறங்கும்போது எழுந்து பார்க்கிறாளாம் வேறு யாராவது கவனிக்கிறாளா என்று ! - வாழ்வின் வசந்தமாக வந்தவளின் குட்டு !

sabeer.abushahruk said...

புயலின் புகைப்படமே, (தென்றலின் சாயலெனில் இப்படி போட்டு மிரட்டாது)

சந்தேகம் களைக!
'கவனி'ப்பில் பூவைப்போல அந்திப் பொழுதைப்போல அழகை ரசிக்கும் நோக்கம் மட்டுமே காண்க!
கூடிக் குழவி கொஞ்சும் எண்ணம் துளியும் இல்லை எனவும் அறிக!

அதிரைBBC said...

வருடத்தானே வந்தேன், அதுக்காக இப்படியா புயலைப் போல் மிரட்டுவது (தென்றலின் சாயலாக இருந்திடுவதாலே)

சாயல்தான் என்னிடம், கவிக்கோ சொன்னார் "திருட அழைக்கும் அழகு"ன்னு அவை எங்கிருந்தாலும் எதிலிருந்தாலும்... உங்கள் கவி வரிகளிலும் அழகே ஆராதிக்கிறது !

தென்றல் வீசும் திசை தேடி புறப்பட்டுட்டீங்க ?

sabeer.abushahruk said...

கிரவுன்,
நீங்கள் தொடங்கிய கவிதையை முடித்து அனுப்பியிருந்தேனே. பரிசீலிக்கப்பட்டதா?

துவக்கமும் கருவும் நீஙகளே தந்துவிட்டதால் தொடர்வது மிக சுலபமாகவே இருந்தது.

தவிர, திண்ணையில் "அசைவத்தீ" வாசிதுவிடுங்கள்.


மிஸ்டர் தென்றலின் சாயல்,

//தென்றல் வீசும் திசை தேடி புறப்பட்டுட்டீங்க ?//

பெரும்பாலும் யாம் இருக்கும் திசைநோக்கியே தென்றல் வீசும்.

உம்மைப் போல் ரசனையாக எனக்கும் ஒரு பெயர் வைத்துத் தாருங்களேன்.

அதிரைBBC said...

//பெரும்பாலும் யாம் இருக்கும் திசைநோக்கியே தென்றல் வீசும். //

அத்தனை பயணிகளா "கவன்கிறாவோ" ?

அதிரைBBC said...

// உம்மைப் போல் ரசனையாக எனக்கும் ஒரு பெயர் வைத்துத் தாருங்களேன்.//

"மொழியின் விழி" இதெப்படி இருக்கு !

About Me